வியாழன், 18 டிசம்பர், 2008

"அம்முவாகிய நான்" பட நாயகி நடிகை பாரதி மீது மானேஜர் புகார்!.சென்னை, டிச.19-

`அம்முவாகிய நான்' படத்தின் கதாநாயகி நடிகை பாரதி மீது, அவரது மானேஜர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியான `அம்முவாகிய நான்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாரதி. இவர், `நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற படத்திலும் நடித்துள்ளார். `சற்று முன் கிடைத்த தகவல்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவர்மீது, இவரது மானேஜர் வேல்ராஜா (வயது 32) என்பவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


நான் நடிகை பாரதியிடம் மானேஜராக பணிபுரிந்து வருகிறேன். சினிமா பைனான்சியர் தணிகைவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். எனது திருமணத்துக்காக தணிகைவேலிடம் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கினேன். அந்த கடனை திருப்பி கேட்டு தணிகைவேல் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை பாரதியும், தணிகைவேலுவும் திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகைகளில் `கிசு கிசு' செய்திகள் வந்தன. இந்த செய்தியை நான் தான் வெளியில் சொல்லுவதாக என் மீது இருவரும் சந்தேகப்பட்டனர்.

இந்த நிலையில், எனது வீட்டுக்கு வந்த ஒருவர் பாரதி அழைப்பதாக கூறி என்னை காரில் அழைத்து சென்றார். வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றதும் பாரதியுடன் சேர்ந்து அங்கிருந்த 5 பேர் என்னை இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார்கள். `செத்துப்போடா' என்று கூறி எனது கழுத்தையும் நெரித்தனர். அப்போது தணிகைவேலும் உடன் இருந்தார்.

பின்னர் இரவு 12 மணிக்கு எனது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு சென்றுவிட்டனர். இதன்பிறகு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன்.

போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்துவிடுவேன் என்று என்னை மிரட்டினார்கள். எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி வருகிறார். இதே புகார் மனு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: