திங்கள், 22 டிசம்பர், 2008

"அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுப்பதில் தகராறு" - நடிகை நயன்தாரா-பட அதிபர் மோதல்!.சென்னை, டிச.23-

`பையா' என்ற படத்தின் அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுப்பது தொடர்பாக நடிகை நயன்தாராவுக்கும்- பட அதிபருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரண்டும் பேரும் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்திருக்கிறார்கள்.


நயன்தாரா - கார்த்தி ஜோடியாக நடிக்க, லிங்குசாமி டைரக்ஷனில் `பையா' என்ற படம் தயாராவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை டைரக்டர் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பதாக இருந்தார்.

இந்த படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. இந்த நிலையில், நயன்தாரா சம்பளத்தை குறைத்தால்தான் படப்பிடிப்பு தொடங்க முடியும் என்று தயாரிப்பாளர் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை ஏற்க நயன்தாரா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பட அதிபர் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், `பையா' படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா ரூ.15 லட்சம் `அட்வான்ஸ்' வாங்கியிருந்தார். இப்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை. என்றாலும் அவர் அட்வான்ஸ் தொகையை திருப்பி தரவில்லை. அவரிடமிருந்து அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து நடிகை நயன்தாரா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

`பையா' படத்தில் நடிப்பதற்காக நான் மூன்று மாதங்களாக காத்திருந்தேன். அந்த சமயத்தில் பட அதிபர் சொன்னபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில், சம்பளத்தை குறைத்தால்தான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்று அவர் என்னை `பிளாக்மெயில்' செய்தார்.

நான் மூன்று மாதங்களாக காத்திருந்ததால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் எனக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டது. எனக்கு நஷ்டஈடு கொடுத்தால் நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விடுகிறேன்.

இவ்வாறு நயன்தாரா அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த இரண்டு புகார்களின் மீதும் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: