செவ்வாய், 9 டிசம்பர், 2008

பட அதிபரிடம் `கேரவன்' கேட்டு தகராறு செய்த கதாநாயகன்


"சினிமா படப்பிடிப்பின்போது `கேரவன்' கேட்டு பட அதிபரிடம் ஒரு புது கதாநாயகன் தகராறு செய்தார்.
`வைகை' என்ற புதிய படத்தில், பாலா என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர், `மானாட மயிலாட' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றவர். இவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்து, `வைகை' படத்தில் நடிக்க வைத்தார்கள்.
படப்பிடிப்பு, பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் வரை அமைதியாக நடித்து வந்த பாலா, தனக்கு `கேரவன்' வேண்டும் என்று பட அதிபரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார்.
பட அதிபர் குமரன் உடனே ஒரு கேரவனுக்கு ஏற்பாடு செய்தார். கேரவன் வந்தபின், ``என்னை தவிர வேறு யாரும் அந்த கேரவனை பயன்படுத்தக்கூடாது'' என்று பாலா கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது
.

இதனால் தயாரிப்பாளர் குமரனுக்கும், கதாநாயகன் பாலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ``நான் இந்த படத்தில் நடிக்க முடியாது'' என்று சொல்லிவிட்டு, பாலா சென்னை திரும்ப முயற்சித்தார்.
இதுபற்றி பட அதிபர் குமரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் பாலாவிடம் விசாரணை நடத்தினார்கள். ``எந்த காரணம் கொண்டும் படப்பிடிப்பில் இருந்து வெளியேறக் கூடாது. படத்தை சுமூகமாக முடித்து கொடுத்த பிறகுதான் சென்னைக்கு வரவேண்டும்'' என்று பாலாவிடம் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து பாலா, நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பட அதிபர் குமரன் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார். அவரை நடிகர் சங்க நிர்வாகிகள் சமாதானப்படுத்தி, `வைகை' படத்தில் நடித்து முடிக்கும்படி அறிவுரை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை: